உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாளை மிகப்பெரிய அறிவிப்பு’ என வைத்திருந்தார்.

இன்று காலை 10 மணிக்கு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் டைட்டில் மாமன்னன் என அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் வடிவேலு, சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார். அப்படம் தயாராகி வரும் நிலையில், அதன் பிறகு வடிவேலுவின் அடுத்த படமாக மாரி செல்வராஜின் மாமன்னன் படம் அமைந்துள்ளது. சில ஆண்டுகளாக வைகை புயல் வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ‘மாமன்னன்’ பட அறிவிப்பு மிக பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என அனைத்து விதமான பாத்திரத்திலும் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பஹத் பாசில். அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் பஹத் பாசில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் மாமன்னன் படத்திலும் பஹத் பாசில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணையும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
By: Hari