துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் Expo2020’யினையொட்டி ரஹ்மானால் தொடங்கப்பட்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த இசைக்கூடம் – Firdaus Studio.
துபாய் அரசாங்கத்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் ஆதரவோடும் முன்னெடுப்போடும் செயல்படத் துவங்கியிருக்கும் இந்த இசைக்கூடம் துபாயின் இசை அடையாளமாக மாறும் நாள் தொலைவில் இல்லை. அந்த அளவுக்கு உயர்தர தொழில்நுட்பங்களைக்கொண்டு இசையாக்கம், ஒலிப்பதிவு என அனைத்து தளங்களிலும் இயங்குகிறது.
இந்த studio ரஹ்மானால் முறைப்படுத்தப்பட்டு அவரது தலைமையில் இயங்கும் இசைக்குழுவுக்கு Firdaus Orchestra என்று பெயர். இந்த இசைக்குழுவின் முக்கிய அம்சமே இந்தக்குழு முழுக்க முழுக்க பெண் இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இந்த பெண்களெல்லாம் MENA (Middle East North Africa) என்று சொல்லக்கூடிய 23 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளைச் சார்ந்த இசைக் கலைஞர்கள். Audition மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். இசை என்றாலே பிற்போக்கு எனவும் அதில் பெண்களுக்கான சுதந்திரமும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அடிப்படைவாத நாடுகளிலிருந்து பெண்களை அழைத்துவந்து உலக இசைக்கலைஞர்களாக அடையாளப் படுத்துகிறது Firdaus Studio. இவர்கள் பெரும்பாலும் அரேபிய இசையை மூலதனமாகக் கொண்ட தொன்ம இசைவடிவங்களையும், இசைக்கருவிகளையும் முதன்மைப் படுத்துகிறார்கள்.
Expoவுக்கு வரும் சகல இசைக் கலைஞர்களும் இந்த studioவை வலம் வருகிறார்கள். சமீபத்தில் இந்திய இசைக்கலைஞர்களான பி.சுசீலா, ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் முதலானோர் studioவுக்கு வருகை தந்திருந்தனர்.
இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக துபாய் சென்றுள்ள இசைஞானி இளையராஜா, ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு நேற்று வருகை புரிந்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் ரஹ்மான் கூறுகையில் “ஸ்டுடியோவுக்கான ஆர்கெஸ்ட்ரா வெளியிடுவதற்கு சிறப்பான இசைக்கோர்வை ஒன்றை மேஸ்ட்ரோ இளையராஜா அமைத்து தருவார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதற்கு “விரைவில் இசையமைக்கிறேன்” என இளையராஜா பதில் அளித்துள்ளார்.

அரபி மொழியின் Firdaus என்ற சொல்லுக்கு Paradise என்று பொருள். அதாவது சொர்க்கம்.
நேற்று(07.03.2022) அந்த பெயருக்கு நியாயம் கிடைத்திருக்கும்.
By: Hari