மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அதையடுத்து மூன்றாவது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். இது அவர் விளையாடும் 6வது உலகக்கோப்பை தொடராகும். இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவின் சச்சினும் டெண்டுல்கரும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.
பேட்டிங்கில் விளாசிய வீராங்கனைகள்:
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடன் பின் வரிசையில் இறங்கிய ஹர்மன்ப்ரீத் சிங் கவுர் அதிரடியாக விளையாட, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். ஸ்மிருதி 129 ரன்களும் , ஹ்ர்மன் 109 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்:
318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளான டியாண்ட்ரா மற்றும் ஹார்லி ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 12ஓவர்களில் இந்த கூட்டணி 100 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னால் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஸ்னே ரானா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.