விக்ரம் – 232
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்துள்ளார். ‘விக்ரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இது கமல் ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமாகும்.
இப்படத்தில் சிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளனராம். அதன்படி இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.
விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லன்களாக நடிக்கின்றனர். சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் பெராடி ஆகியோர் துணை வில்லன்களாக வந்து மிரட்ட உள்ளனர்.
படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில், டீசரில் நவம்பர் 7, 2020 அன்று வெளியிடப்பட்டது. 1986 திரைப்படத்தின் தீம் பாடலின் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தினாலும், இந்தப் படம் 1986-விக்ரம் பெயரின் தொடர்ச்சி அல்ல.