தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவர் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் ரசிகர்களைக் கவர்ந்தது. அதையடுத்து இப்போது முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடித்து, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படம் ஜதி ரத்னலு. இந்த படத்தின் இயக்குனர் அனுதீப் கே.வி தான் தற்போது சிவகார்த்திகேயனின் 20ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜி, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சமீபத்தில் பிரேம்ஜி சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
By: Hari